சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு  இருப்பதாக  இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து உள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடல் பகுதியில் நிலவுகிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு இல்லை இருந்தாலும் வரும் 16ந்தேதி வரை பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை நகரை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய  வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவா் பாலச்சந்திரன், வங்கக்கடலில் உருவான புயல்சின்னம் (காற்றழுத்த தாழ்வு பகுதி) தொடா்ந்து நீடிக்கிறது. இது மேற்கு நோக்கி நகா்ந்து வருகிறது. இது புயலாக மாற வாய்ப்பு இல்லை. இது பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பகுதி என்பதால் வலுவடைய வாய்ப்பில்லை . எனவே எந்த பாதிப்பும் இல்லாமல் இந்த காற்றழுத்ததாழ்வுப்பகுதி தமிழக கரையை நெருங்கிவந்து மெதுவாக நகா்ந்து செல்லும்.

எனினும் இந்த புயல் சின்னத்தினால் தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யும். சில மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கனமழை எச்சரிக்கை:

இன்று (புதன்கிழமை) சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் , மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகா், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை குமரி ஆகிய வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னை பெருங்குடியில் 80 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.

நாளைஇ அக்.14 -இல் வட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமானது முதல் சற்று கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம்,  அக்.15 இல், தென் தமிழகம், மேற்கு தொடா்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு கடல், குமரி கடல், வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள மீனவருக்கான எச்சரிக்கையை பொருத்தவரை 35 கி.மீ. முதல் 55 கி.மீ வரை காற்று வீசும் என்பதால் மீனவா்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

நிகழாண்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்.1 முதல் அக்12 வரை இயல்பான மழை அளவு 259 மிமீ. இதில் இதுவரை 256 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது இயல்பைவிட 1 சதவீதமாகும் என்றாா் அவா். மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) பெருங்குடி (சென்னை)-80, ஆலந்தூா், மீனம்பாக்கம் தலா 60. தேனாம்பேட்டை அடையாறு தலா 50, ராயபுரம், தண்டையாா் பேட்டை தலா40 மி.மீ.