சென்னை: தமிழக அரசு பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகைக்கு பயனர்கள்   ஜூன் வரை விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டின் பெண்களை கவரும் வகையில், திமுக அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.  இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள தகவலில், சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உழைப்புக்கு ஊதியம் கணக்கிடப்பட்டிருந்தால், குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும்.

இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரித்திடவே பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து பெண் உரிமை போற்றிட, கலைஞர் அவர்களின் பெயரால் இந்த மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான், இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் ‘மகளிர் உரிமைத் தொகை’ என்று கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக  விண்ணப்பித்தவர்களில் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே முதற்கட்டமாக பயனாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. பின்னர்,  நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் சரியான ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்தால் பரிசீலனை செய்து பயனாளர்கள் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், விண்ணப்பிக்க தவறியவர்கள் என பலர் விண்ணப்பித்த நிலையில் தற்போது ஒரு கோடியே 15 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளர்களாக உள்ளனர்.

ஆனால், இதுவரை மகளிர் உரிமைதொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும், அதற்கு ஜூன் வரை அவகாசம் உள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி தெரிவித்து உள்ளார். இது பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, மகளிர் உரிமை தொகை மேலும் பலர் மேல்முறையீடு செய்ய தயாராகி வருகின்றனர்.