ஓவல்:

சாம்பியன்ஸ் டிராபி இறுதிபோட்டியில் இந்திய அணிக்கு 339 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சார்பில் பகர் ஜமான் சதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் 8வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் (50 ஓவர்) இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் களமிறங்கின. தொடரை நடத்தும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 அணிகள் வெளியேறின.

இதையடுத்து, லண்டன் ஒவல் மைதானத்தில் இன்று நடக்கும் இறுதிபோட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் ருமான் நீக்கப்பட்டு காயத்திலிருந்து மீண்ட முகமது ஆமிர் வாய்ப்பு பெற்றார்.

பாகிஸ்தான் அணிக்கு அசார் அலி, பகர் ஜமான் ஜோடி துவக்கம் தந்தது. புஇருவரும் சிறப்பாக செயல்பட்டனர். அஷ்வின் பந்தை அசார் சிக்சருக்கு பறக்கவிட்டார். ஜடேஜா பந்துவீச்சில் பகர் இரண்டு பவுண்டரி அடித்தார். அரை சதம் அடித்த அசார் (59) ரன்-அவுட்டானார். தொடர்ந்து அசத்திய பகர், ஒரு நாள் அரங்கில் முதல் சதம் அடித்தார்.

இவர் 114 ரன்களில் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார். சோயப் மாலிக் (12) ஏமாற்றினார். பாபர் அசாம் 46 ரன்கள் எடுத்தார். பின், இணைந்த ஹபீஸ், இமாத் வாசிம் அதிரடியாக ரன் சேர்த்தனர். ஹபீஸ் அரை சதம் அடித்தார். முடிவில், பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 338 ரன்கள் எடுத்தது. ஹபீஸ் (57), வாசிம் (25) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் புவனேஷ்வர், பாண்ட்யா, ஜாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.