சென்னை:
சென்னை பகுதியில் செயின் பறிப்பில் இளம்பெண் ஒருவர் ஈடுபடுவது அம்பலமாக அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. சமீபத்தில் சென்னை கடற்கரை சாலையில் நடந்த செயின் பறிப்பு சம்பவத்தின் போது இருவர் பலியான சம்பவமும் நடந்தது.

இதுபோன்ற செயின் பறிப்பு சம்பவங்களில் வாலிபர்களே ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இளம்பெண் ஒருவரும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்கரணை ஏ.எஸ்.ராஜன் நகரை சேர்ந்தவர் முத்துவடிவு (வயது 61). நேற்று முன்தினம், இவர் தனது வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தார்.
அப்போது எதிரே ஒரு பைக்கை இளம்பெண் ஓட்டிவர, பின்னால் ஒரு இளைஞர் அமர்ந்திருந்தார். முத்துவடிவு அருகில் அந்த இளம்பெண், பைக்கை நிறுத்தினார். பின்னால் இருந்த வாலிபர், முத்துவடிவிடம் முகவரி கேட்பது போல் ஏதோ கேட்டார். பிறது சடாரென்று, முத்துவடிவின் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் நகையை இழுத்துப் பறித்தார். அடுத்த விநாடி அந்த இளம்பெண் பைக்கை கிளப்பி பறந்துவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
பைக்கில் வந்த இளம்பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கலாம் என்றும், முகத்தை துணியால் மூடி ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும் முத்துவடிவு தெரிவித்தார்.
அந்த இளம்பெண்ணையும், வாலிபரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுவரை செயின் பறிப்புகளில் வாலிபர்களே ஈடுபட்டு வந்த நிலையில், இளம்பெண் ஒருவரும் இக் குற்றச்செயலில் ஈடுபட்டதாக முதன் முறையாக புகார் பதியப்பட்டுள்ளது.
வேறு சில செயின் பறிப்பு சம்பவங்களிலும் இந்த இளம்பெண் ஈடுபட்டிருக்கலாம் என்றும், வாகனத்தை பெண் ஓட்டி வந்தால் சந்தேகம் ஏற்படாது என்பதால் செயின் பறிப்பில் பெண்ணை ஈடுபடுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆகவே, பெண்கள் ஓட்டி வரும் வாகனங்களிடமும், நகையணிந்து நடமாடும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
Patrikai.com official YouTube Channel