சென்னை: உங்கள் மாவட்டத்தில் பணியாற்றியது மற்றும் சாதித்து என்ன என்பதை சி.இ.ஓ விளக்க வேண்டும் இன்று சென்னையில் நடைபெற்ற கல்வி அதிகாரி கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தலைமையில் இன்று முற்பகல், கன்னியாகுமரி, மயிலாடுதுறை உள்ளிட்ட 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாவட்ட கல்வி அலுவலர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி இரண்டு நாள் நடைபெறுகிறது. கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் இன்றும் (ஜூன் 23), நாளையும் (ஜூன் 24) ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டம் சார்பிலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), உதவி திட்ட அலுவலர் என தலா 5 பேர் பங்கேற்கின்றனர்.
இந்த ஆலோசனையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், மாணவர் சேர்க்கை, போக்சோ வழக்குகள், இடைநிற்றல் கண்காணிப்பு, அரசின் மாணவ நலத் திட்டங்கள், விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்குவது, பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படு கிறது.
இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “மாணவர்களுக்கு என்னென்ன முறையில் பயிற்சி வழங்கலாம்? மாணவர்கள் எந்த பாடப்பிரிவை ஆர்வத்துடன் கற்கின்றனர் என அறிந்து கொள்ளும் வகையில் இந்த ஆய்வு கூட்டமானது ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆய்வு கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டமாக அழைத்து பேசும் போது அந்த மாவட்டத்தைச் சார்ந்த செயல்கள் குறித்து விளக்குங்கள். உங்கள் மாவட்டத்தில் பணியாற்றியது மற்றும் சாதித்து என்ன என்பதை சி.இ.ஓ விளக்க வேண்டும்.
அது மட்டுமின்றி பள்ளி கல்வித் துறையில் கற்பித்தல் மட்டுமல்லாமல், விளையாட்டு மற்றும் பிற துறைகளில் என்னென்ன புதிய திட்டங்கள் செய்துள்ளீர்கள்? என்பதனை தெரிவியுங்கள். அதனையும் பிற மாவட்டங்களுக்கு தெரிவித்து பின்பற்ற வைப்போம். அதேபோல், நாங்களும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து தகவல்களை பெற்றுள்ளோம். அதையும் பகிர்ந்து கொள்கிறோம். அனைத்து விஷயங்களுக்கும் ஒளிவு மறைவின்றி அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும்” என்றார்.
இன்று நடைபெற்ற காலை கூட்டத்தில், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் உள்பட 13 மாவட்டங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பிற்பலில் கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருப்பூர், சேலம், திண்டுக்கல், மதுரை, ஈரோடு, திருச்சி உள்பட 12 மாவட்டங்களின் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி கல்வித் துறையின் அனைத்து இயக்குநர்களும் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் முன்னிலையில் ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகளையும் அமைச்சர் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது மாவட்ட வாரியாக அரசின் திட்டங்கள், சவால்கள், கல்வி செயல்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறியப்பட உள்ளது.