திருவனந்தபுரம்: மீனவர்களுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழகம் போன்று கேரளாவிலும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் கேரள மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆட்சியை தக்க வைக்க கம்யூனிஸ்ட் கட்சியும், மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந் நிலையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்தப் பணம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இனி 2 கோடி மீனவர்களுக்கும் வழங்கப்படும். கேரளா மாநில தங்கக்கடத்தல் வழக்கை மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கக் கூடாது என்று கேரள மாநில அரசு கூறுவது சரியல்ல என்று தெரிவித்தார்.