டெல்லி: சீனாவின் பெட்டிங் மற்றும் கடன் தொடர்பான 200க்கும் மேற்பட்ட மொபைல் செயலிகளுக்கு தடை விதிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த செயலிகளி (ஆப்ஸ்)  சட்டவிரோத பணமோசடியில் ஈடுபட்டு, நாட்டின் நிதி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்து உள்ளது.

தேச பாதுகாப்பு கருதி சீன தேச மொபைல் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது. ஏற்கனவே டிக்-டாக் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயலிகளுக்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளது.  இதுமட்டுமின்றி, சில சீன தயாரிப்பு மொபைல்கள், சீனாவின் நட்பு நாடுகளை சேர்ந்த செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், தற்போது, 200க்கும் மேற்பட்ட கடன் மற்றும் பெட்டிங் (சூதாட்டம்) தொடர்பான மொபைல் செயலிகளுக்கு தடை விதிக்க இந்திய உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்  முடிவு செய்துள்ளது.

அதன்படி சுமார் 138 ‘Betting’ செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், அதனை முடக்கவும் முடிவு செய்துள்ளதாக  தலைநகர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.  சீனாவின் கடன் செயலிகள் மூலம், நமது நாட்டு மக்கள் ஏமாற்றப்படுவதாகவும், மேலும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாவதாகவும் ஏராளமான புகார்கள் வந்துள்ளதைத் தொடர்ந்து, அதற்கு தடை விதிக்க  முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்ஸ் ஐடி சட்டத்தின் பிரிவு 69ஐ ஈர்க்கிறது என்பதை உறுதிசெய்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நிறுவனங்கள் மற்றும் நபர்களால் இயக்கப்படும் மொபைல் ஆப்ஸ் மூலம் சிறிய அளவிலான கடன்களைப் பெற்ற சாதாரண மக்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் துன்புறுத்துதல் போன்ற பல புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.