டெல்லி: பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்த ஆலோசனைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த முதலீட்டு திட்டங்களுக்கு ஏற்ப பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நிதி ஆயோக்கின் பரிந்துரைகளின் அடிப்படையில், அரசு நிர்வாகிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு இந்த திட்டம் குறித்து ஆலோசனைகளை தொடங்கி இருக்கிறது.
தேசியமயமாக்கல் தொடர்பான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கையில், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் முன்னர் வங்கி தேசியமயமாக்கல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதால் அது பற்றி விவாதங்கள் இன்னும் தீவிரமடைய வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் சிந்து வங்கி மற்றும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகியவை இதில் அடங்கும். ஏற்கனவே நடைபெற்று வரும் 10 பொதுத்துறை வங்கி இணைப்புகளில் இவை சேர்க்கப்படவில்லை.