செங்கல்பட்டு: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கை தொடர்பாக தமிழக வனத்துறை விளக்கம் அளிக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை ஒட்டிய 5 கி.மீ. சுற்றளவு பகுதி பாதுகாக்கப்பட்டப் பகுதியாக உள்ளது. இதை 3 கிலோ மீட்டராக குறைக்கும் வகையில், தமிழக வனத்துறை, மத்திய வன உயிரின வாரியத்தின் ஒப்புதலைக் கோரியுள்ளது.
இதற்கு, பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சில தனியார் நிறுவனங்களின் லாப நோக்கத்துக்காக, வனத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், சரணாலய வெளிச்சுற்று பகுதியை 3 கி.மீ. என்ற அளவில் குறைக்க, தமிழக வனத்துறை சார்பில் மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமும், தங்கள் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதிக்காக, மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
தனியார் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதிக்காக முயன்று வரும் சூழலில், அதற்கு உதவும் வகையில், வனத் துறையின் நடவடிக்கை அமைந்துள்ளது. இதனால், வனத்துறை நடவடிக்கையின் பின்னணி குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதில் சம்பந்தப்பட்ட வனச் சரகர், வன உயிரின காப்பாளர் உள்ளிட்டோர் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
வேடந்தாங்கல் சரணாலய சுற்றளவு குறைப்பு முயற்சிக்கு தமிழகத்தில் எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த கோரிக்கைக்கான காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த விவகாரத்தில் தமிழக வனத்துறைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.