டில்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் லைட்’ கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசியும், இந்திய நிறுவனமான தெலுங்கானா தலைநகர் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து இயங்கும் ‘ஹெட்டெரோ’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகளை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நேற்று (அக்டோபர் 10) அனுமதி வழங்கி உள்ளது.
இந்த தடுப்பூசிகள் 6மாத காலத்திற்குள் உபயோகிக்கப்பட வேண்டும் என்பதால், அதை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி வழங்கக் கோரி, மத்திய அரசிடம் இந்தியாவுக்கான ரஷ்ய துாதர் நிகோலே குடாஷேவ் கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று ஹெட்டெரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 40 லட்சம் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி டோஸ்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.