சென்னை
தமிழகத்துக்கு வர வேண்டிய 45 டன் ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு அரசைக் கேட்காமலே மத்திய அரசு மாற்றி உள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருகின்றன. தற்போது சுமார் 80000 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். தற்போதைய இரண்டாம் கட்ட கொரோனா பரவலில் பலர் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. எனவே ஆக்சிஜன் தேவை அதிக அளவில் உள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக தமிழகத்தில் 200 டன்கள் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தமிழகத்து வர வேண்டிய 45 டன்கள் ஆக்சிஜன் வாயுவை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு மாற்றி உள்ளது. இந்த ஆக்சிஜன் சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தயாரிக்கப்படுவதாகும். ஏற்கனவே அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன் அனுப்புமாறு கோரிக்கை எழுந்துள்ள நேரத்தில் மத்திய அரசு இவ்வாறு செய்துள்ளது.
இது குறித்து தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், “இந்த முடிவு தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கடும் பாதிப்புகள் ஏற்படலாம். நாங்கள் எங்கள் அண்டை மாநிலத்தவருக்கு உதவத் தயாராக உள்ளோம். கடந்த 2020 வருடமும் அதைச் செய்துள்ளோம். ஆனால் மத்திய அரசு உண்மை நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
நான் இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் விரவில் பேச உள்ளேன். மத்திய அரசின் முந்தைய ஆக்சிஜன் ஒதுக்கீட்டின்படி ஏப்ரல் 20 ஆம் தேதி அன்று தமிழகத்துக்கு 200 டன்னில் இருந்து 320 டன்களாகவும் ஏப்ரல் 25 அன்று 465 டன்களாகவும் அதிகரித்து இருக்க வேண்டும். ஆனால் தற்போது தமிழகத்துக்கு 200 டன்களாகவும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு தலா 360 டன்களாகவும் ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.