டெல்லி: ‘சிமி’ பயங்கரவாத அமைப்பு மீதான தடை மேலும் 5ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. சிமி அமைப்பின் தலைவர்கள் மற்றும் அதன்மீதான சமீபத்திய பயங்கரவாத வழக்குகளை காரணம் காட்டி, சிமி, ‘சட்டவிரோத சங்கங்கள்’, யுஏபிஏ தடை சட்டத்தின் கீழ் அந்த அமைப்புகளுக்கு மேலும் ஐந்தாண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் இல்லினாய் மாநிலத்தை சேர்ந்த பேராசிரியர் முகமது அகமதுல்லா சிதிக்கி என்பவரால் உருவாக்கப்பட்டது சிமி என்று அறியப்படுகிறது. ஆரம்ப காலங்களில் ஜமாத் இ இஸ்லமி இயக்கத்தின் மாணவர் அமைப்பாக தெற்காசிய பயங்கரவாத தளத்தால் இனம் காணப்பட்ட நிலையில், கடந்த 1981- ஆம் ஆண்டு தனியாக பிரிந்தது.
பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராபத்தின் 1981 இல் இந்தியாவிற்கு வருகை தந்ததில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அமைப்பில் இருந்து பிரிந்து தனியாக செயலாற்ற தொடங்கியது. முஸ்லீம் இளைஞர்களின் நலனுக்காக பாடுபடும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பின்னர் சிந்தாந்தங்களில் மாற்றம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி) (Students’ Islamic Movement of India (SIMI) மாணவர் அமைப்புகளை தொடங்கி நாட்டிற்கு எதிரான மனநிலையில் செயலாற்றி பயங்கரவாத செயல்களில் இறங்கியது.
இதையடுத்து, இதை மத்தியஅரசு தடை செய்தது. கடந்த 2001-ல் வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது சிமி அமைப்பு முதன்முதலாக தடை செய்யப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
2014-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போதும் சிமி அமைப்பின் மீது 5 ஆண்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதிலும், நாட்டில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதிலும் ஈடுபட்டதற்காக சிமி அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளாது. பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதிலும், பாரதத்தின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களிலும் சிமி அமைப்பு ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிமி மீது விதிக்கப்பட்ட தடை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என பதிவிட்டுள்ளார்.