புதுடெல்லி: வாகன உற்பத்தி துறையில் பல லட்சக்கணக்கானோர் வேலையிழந்து வருவதால், வாகன உற்பத்திக்கான ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகன உற்பத்தித் துறை நசிந்துபோவதற்கு காரணமான மத்திய அரசு, தற்போது இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முன்வந்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பயணிகள் வாகன உற்பத்தியில், கடந்த ஆகஸ்ட் மாதம் பெரும் சரிவு ஏற்பட்டது.
டீலர்ஷிப் ஏஜென்சிகளுக்கு வாகனங்களை சப்ளை செய்யும் அளவு கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் 34% குறைந்தது. இதனால், ஆட்டோமொபைல் தொடர்பான ஜிஎஸ்டி வரியை குறைப்பது தொடர்பான முன்மொழிவை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளது மத்திய நிதியமைச்சகம் என்று தெரிவித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தற்போது, ஆட்டோமொபைல் துறைக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டில் நாட்டின் முதன்மையான 6 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் டீலர்ஷிப் ஏஜென்சிகளுக்கு வழங்கிய வாகனங்களின் எண்ணிக்கை 259925.
ஆனால், இந்தாண்டின் ஆகஸ்ட் மாதம் டீலர்ஷிப்புகளின் கைகளுக்கு கிடைத்த வாகனங்களின் எண்ணிக்கை 171193. இந்த வகையில் 34% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.