டில்லி,

ராமேஸ்வரத்திற்கு வரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுப்பயணிகளின் வசதிக்காக அந்த பகுதியில் 4 வழி சாலைகளையும், பாம்பன் கடற்பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கான ஆய்வு பணிகளையும் செய்ய மத்தியஅரசு முயற்சித்து வருகிறது.

கடந்த மாதம் அப்துல்கலாம் நினைவு தினத்தன்று ராமேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள பேய்க்கரும்பில் அமைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் மணி மண்டபத்தை திறந்து வைத்த மோடி, அத்துடன் புதிய சாலைகளையும் திறந்து வைத்தார்.

இந்நிலையில், பாம்பனில் அமைந்துள்ள தற்போதைய பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று ராமநாதபுரம் எம்.பி.யான அன்வர் ராஜா, மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்தார்.

அதை ஏற்றுக்கொண்ட சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகளின் மத்திய அமைச்சர் நிதன் கட்கரி, அன்வர் ராஜாவிடம், “ஏன் விரிவாக்கம் செய்ய வேண்டும், உலகத் தரத்திலான புதிய பாலம் கட்டுவோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது பாம்பனில் புதிய பாலம் அமைக்கவும், பாம்பன் சுற்று வட்டாரப்பகுதியில் இருந்து புதிய நான்கு வழித்தடங்களை அமைக்கவும் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

 

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை, பாம்பனை சுற்றியுள்ள நிலப்பகுதி களில் இருந்து ராமேஸ்வரம் தீவுக்கு 4 வழி பாதைகள் அமைக்க ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம்-ராமேஸ்வரம் (தேசிய நெடுஞ்சாலை 49) நான்கு வழித்தடத்தின் ஒரு பகுதியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அதற்கான உத்தரவை வழங்கி உள்ளது.

அதுபோல  தற்போதுள்ள பாம்பன் பாலத்திற்கு இணையாக, இன்னொரு பாலம் அமைக்கவும் விரிவான அறிக்கை தயாரிக்க கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால், இதுகுறித்த பணி இன்னும் தொடங்கவில்லை என்றும் அதுகுறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள  நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மேலும், புதிய பாலத்திற்கு டி.ஆர்.ஆர். மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (சி.ஆர்.எஸ்) அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.