டெல்லி: பணியிடங்களில் கொரோனாவுக்கு எதிராக இலவச பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் போடுமாறும், அதற்கான முகாம்களை ஏற்பாடு செய்யுமாறும் அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே ஒழி என்பதால், அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள், பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பணியிடங்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசின் பணியாளர் நலன் துறை பிறப்பித்துள்ளது.
‘ஆசாதி கா அம்ரித் மகாஉத்சவ்’ என்ற பெயரில் (சுதந்திர தின அமுத பெருவிழா) கொண்டாடுவதையொட்டி, இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் ஆனவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக போடுவதற்கு கோவிட் தடுப்பூசி அமுத பெருவிழா என்ற திட்டத்தை (ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரையில் (75 நாள் திட்டம்) மத்திய அரசு தொடங்கி இருப்பதும் இந்த உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படிதான் பணியிடங்களில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிவோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் போடுவதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.