டெல்லி: பிரணாப் முகர்ஜியின் மறைவை அடுத்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவு காரணமாக ஆகஸ்டு 10ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்றும் பலனின்றி அவர் இன்று மாலை காலமானார்.
அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில், பிரணாப் முகர்ஜியின் மறைவை அடுத்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் 6ம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அப்போது நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசுப்பூர்வமாக மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.