பிரதமருக்கான ஆடம்பர மாளிகையுடன் கூடிய நாடாளுமன்ற வளாகம் அமைக்கும் சென்ட்ரல் விஸ்டா திட்டம் இரவு பகல் பாராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் நாட்டையே உருக்குலைத்து வரும் வேளையில் இதுபோன்ற அவசியமற்ற திட்டங்களுக்கு தற்காலிக ஓய்வு வழங்க வேண்டுமென்று பல்வேறு அமைப்பினர் நீதிமன்றங்களை நாடியபொழுதும் இந்த பணி தடையின்றி நடந்து வருகிறது.

ஊரடங்கு காரணமாக தலைநகர் டெல்லியில் கட்டுமான பணிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது இருந்தபோதும் சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணி அத்தியாவசியமானது என்று கூறி இதற்கு விலக்களித்துள்ளது மத்திய அரசு.

நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தொழிலாளர்கள் வந்து சென்றாலும் பலர் இங்கேயே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வசிப்பிடங்களில் தங்கி வேலை செய்கிறார்கள்.

அலுமினிய தகடுகளால் ஆன இந்த குறுகலான அறைகளில் தங்கவைக்கப்படும் தொழிலாளர்கள் அவர்களுக்குத் தேவையான படுக்கையை அவர்களே எடுத்துவர வேண்டும்.

அதிக பாதுகாப்பு பகுதியான ராஜ்பாத் முதல் ஜனாதிபதி மாளிகை வரை உள்ள 3.2 கி.மீ. நீள சாலையை தோண்டி போட்டு வேலை செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொய்வின்றி நடந்து வருகிறது.

பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் என்று எவரும் இந்த பகுதிக்குள் நுழைந்துவிட முடியாத படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைத்து வேலையும் ரகசியமாக நடந்து வருகிறது.

இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களை தொடர்புகொண்ட ஸ்க்ரோல் செய்தி நிறுவனம் பல்வேறு தகவல்களை சேகரித்துள்ளது. தொழிலாளர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அதிர்ச்சி தகவலும் அதில் வெளியாகி இருக்கிறது.

தினமும் 20 முதல் 30 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டி இருப்பதாகவும், நாள் தோறும் 12 மணி நேரம் வேலைபார்க்க வேண்டி இருப்பதாகவும், தங்களுக்கான ஊதியம் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை என்றும், மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டு பணிக்கு வராதவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைகளின் தேவை அதிகரித்திருக்கும் வேளையில் போர்க்கால அடிப்படையில் அவற்றை கட்டுவதற்கு பதில் டெல்லியின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தொழிலாளர்களை பேருந்துகளில் அழைத்துசெல்வதன் மூலம் கொரோனா பரவலுக்கு மத்திய அரசு வழி செய்திருக்கிறது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

சென்ட்ரல் விஸ்டா எனும் பெயர் இந்திய வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ இல்லையோ அதன் கட்டுமான பணியில் உள்ள தொழிலாளர்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தியிருப்பது தான் நிகழ்கால உண்மையாக உள்ளது என்று ஸ்க்ரோல் வெளியிட்டிருக்கும் அந்த செய்தி வெளிப்படுத்தியிருக்கிறது.