சென்னை: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடமிருந்து கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி கிடைத்துவிட்டதால், சென்ட்ரல் சதுக்கம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ட்ரல் சதுக்கம் என்பது ரூ.400 கோடி செலவில் ஒரு போக்குவரத்து மையமாக உருவாகவுள்ளது. இந்த சதுக்கத்தில், 21 அடுக்கு கட்டடம், பேருந்து வழித்தடங்கள், 3 அடுக்கு நிலத்தடி பார்க்கிங் அமைப்பு உள்ளிட்டவை இதில் இடம்பெறும். மொத்தமாக 1000 கார்கள் வரை இதில் நிறுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சதுக்கமானது, சென்னை மெட்ரோவையும், புறநகர் ரயில் சேவையையும் இணைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பயணிகள் ஒரு போக்குவரத்திலிருந்து மற்றொரு போக்குவரத்திற்கு எளிதான முறையில் மாறிக்கொள்ளும் வகையில் இந்த சதுக்க கட்டுமானம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியானது, கட்டுமானத் திட்டப்பகுதிக்கு அருகிலுள்ள பக்கிங்ங்ஹாம் கால்வாய், பல முக்கியப் பாரம்பரிய கட்டடங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தி, சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.