டெல்லி மத்திய அரசு தலைமைச் செயலக பணியாளர்கள் பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலக வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதவிப் பிரிவு அலுவலர், பிரிவு அலுவலர், துணைச் செயலர், துணைச் செயலர் மற்றும் இயக்குநர் என அனைத்து நிலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தங்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

12,000 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய தலைமைச்செயலக பணியாளர்கள் (Central Secretariat Service – CSS) சங்கம் நடத்திய கணக்கெடுப்பில் பணியாளர்களின் தற்போதைய பனிச்சுமையைக் குறுக்கை 40 முதல் 50 சதவீதம் கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிரதமரின் தனிச் செயலர், நிதி அமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் பலமுறை வலியுறுத்தியபோதும் கடந்த 8 மாதங்களாக தங்கள் கோரிக்கை மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

மத்திய தலைமைச்செயலகத்தின் நார்த் பிளாக்கில் இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான CSS கேடர் அதிகாரிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதவி உயர்வு வழங்கவேண்டும், வேறு துறைகளுக்கு பணி மாறுதல் வழங்குவதை தடை செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.