டெல்லி: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவ வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA)  ஒப்படைத்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம்  தெரிவித்து உள்ளது.

பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்துள்ள‌ ஒயிட் பீல்டில் ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற உணவகம் இயங்கி வருகிறது. இங்கு  அதிகாலை முதல் நள்ளிரவு மக்கள் மக்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக, இங்கு விற்பனை செய்யப்படும் மசால் தொசைக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இதை வாங்கி சாப்பிட எப்போதும் கூட்டம் வருவதால் பரபரப்பாக காணப்படும்.

இந்த  நிலையில்தான் கடந்த கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 1ந்தேதி) இந்த ஓட்டலுக்கு வந்த மர்ம நபர், உணவு உண்பதுபோல நடித்துக்கொண்டு, குண்டு வைக்கப்பட்டிருந்த கையை வைத்து விட்டு சென்றார். அதில் இருந்து குண்டுகள் வெடித்து சிதறியதில் ஓட்டல் சேதமடைந்ததுடன்,  10 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் அரசு, பயங்கரவாதிகள் தாக்குதல் மாதிரி தெரியவில்லை என்று கூறி வந்தது. அதுபோல மாநில அரசு காவல்துறையினரும் விசாரணை குறித்து முறையான அறிவிப்பு வெளியிடவில்லை. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், என்ஐஏ அமைப்பு களமிறங்கியது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மாதிரிகளை சேகரித்தனர். இதைத்தொடர்ந்து, தேவைப்பட்டால் வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைப்போம் என மாநில முதல்வர் சித்தராமையா கூறினார்.

இந்த நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவ வழக்கு விசாரணையை மத்திய உள்துறை அமைச்சகம் என்ஐஏவிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ஐஏ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை மேலும் முடுக்கிவிட்டுள்ளது.

முன்னதாக வெடிவிபத்து குறித்துப் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா, “நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். 8 குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்தும் வெவ்வேறு திசைகளில் செயல்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன. பல சிசிடிவி காட்சிகளை சேகரித்துள்ளோம். பொறாமை காரணி உள்ளதா என்பது உட்பட ஒவ்வொரு கோணத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த தருணத்தில் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதை அரசியல் பிரச்சனையாக்க வேண்டாம் என்றும் எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். மங்களூரு குண்டுவெடிப்புக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்பது எங்களுக்குத் தெரியாது. பாஜக எதிர்மறையான அறிக்கைகளை வெளியிடக்கூடாது” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.