டெல்லி: விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது, நிறைய திருமணங்கள் நடக்கின்றன, அப்படி இருக்கும் போது எங்கே பொருளாதார வீழ்ச்சி என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கூறி இருக்கிறார்.
70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. உணவு உற்பத்தி, ஆட்டோமொபைல் துறைகளில் பல முன்னணி நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன.
பொருளாதார சரிவுக்கு மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம் என்று எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. பொருளாதார நிபுணர்களும் இதே கருத்தை தான் தெரிவித்துள்ளனர்.
நடப்பாண்டில், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாக குறைப்பதாக முடீஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் பொருளாதார சரிவு என்பது இல்லை, மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கூறி இருக்கிறார்.
அவர் மேலும் கூறியதாவது: விமான நிலையங்களில், ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏராளமான மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர்.
நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருக்கிறது என்பதை தானே இது காட்டுகிறது. நரேந்திர மோடியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே எதிர்க்கட்சிகள் இதுபோன்ற பொய்களை கூறி வருகிறது.
ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். இது வழக்கமான ஒன்றுதான். அது ஒரு சுழற்சி. மீண்டும் பொருளாதாரம் முன்னேற்றம் பெறும் என்றார்.