டெல்லி: இணைய தளத்தில் குழந்தைகள் ஆபாசப்பட அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், சிறப்புக் குழு ஒன்றை சிபிஐ அமைத்துள்ளது.
ஜெர்மனியில், இந்திய குழந்தைகள் 7 பேர் ஆபாசப்படங்களில் ஈடுபட்டுள்ளதை கண்டுபிடித்த அந்நாட்டு போலீசார், இது குறித்த தகவலை சிபிஐக்கு தெரிவித்திருக்கின்றனர். அதன்பிறகே சிறப்பு விசாரணை குழுவை சிபிஐ அமைத்திருக்கிறது.


ஆன்லைனில் பாலியல் துஷ்பிரயோகம், சுரண்டல், பாலியல் விசாரணை தொடர்பான தகவல்களை வெளியிடுதல், அவற்றை பரப்புதல், சேகரித்தல், விளம்பரப்படுத்துதல் ஆகியவற்றை இந்த குழு கண்காணிக்கும்.
இது குறித்து சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தகவல் தொழில்நுட்பத்தின் எதிர்பாராத வளர்ச்சி, கடந்த 20 ஆண்டுகளில் உச்சத்தை எட்டி இருக்கிறது. அதனால் சிறுவர்கள், டீன் ஏஜ் தரப்பினர் அதிகளவு கவரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை களையவேண்டும்.


இந்த சிக்கல் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் நிறைந்துள்ளது. புதிய பரிமாணத்தை நோக்கி நகர்த்தியுள்ள இந்த தொழில்நுட்பங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும் என்று கூறி இருக்கிறது.
அண்மையில், இதுபோன்ற குற்றங்கள், அது தொடர்பான ஆதாரங்கள் அதிகளவு நிகழ ஆரம்பித்து இருக்கின்றன. அவர்களில் முக்கியமான ஒன்று, பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் அப்பாவிகள் என்பது தான்.