லக்கிம்பூர்
விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனத் தகவல்கள் வந்துள்ளன.
கடந்த 3 ஆம் தேதி அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் அம்மாநில துணை முதல்வர் மற்றும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு கருப்புக் கொடி காட்ட திரண்டு இருந்தனர். அப்போது திடீர் என அங்கு அணிவகுப்பில் வந்த கார் விவசாயிகள் மீது ஏறி 4 விவசாயிகள் உயிர் இழந்தனர். இதைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததில் 5 பேர் மரணம் அடைந்தனர்.
போராடிய விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்சநீதிமன்றம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அதன்பிறகு சிறப்புக் காவல்துறையினர் நேற்று முன் தினம் காலை ஆசிஷ் ஆஜரானார்/ அவரிடம் சிறப்புப் படை காவல்துறையினர் சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி உள்ளனர்.
ஆசிஷ் எந்த கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் அளிக்காமல் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி ஆசிஷ் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நீதிபதியின் முன் முன்னிறுத்தப்பட்டு அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளித்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க மனு அளிக்கப்பட்டுள்ளது.