டில்லி

பெரும்பான்மை சமூகத்தினரை விட அதிக உரிமைகள் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதை மாற்ற வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் சத்யபால் கூறி உள்ளார்.

நேற்று நாடெங்கும் அம்பேத்கர் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.   அவ்வரிசையில் டில்லி பல்கலைக் கழகத்தில் நேற்று அம்பேத்கரின் 127 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சத்யபால் சிங் கலந்துக் கொண்டார்.    அத்துடன் அவர் விழாவில் சிறப்புரை ஆற்றினார்.

மத்திய அமைச்சர் சத்யபால் சிங், “நமது அரசியலைமைப்பு சட்டத்தில் சிறுபான்மையினருக்கு பல்வேறு உரிமைகள் வழங்கப் பட்டுள்ளன.   அப்படி இருந்தும் அவர்கள் தாங்கள் ஏமாற்றப் பட்டு விட்டதாக நினைக்கிறார்கள்.    அது மிகவும் தவறாகும்.  சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை  நடத்தவும் மத நிறுவனங்கள் நடத்தவும் உரிமைகள் அளிக்கப்பட்டுளன.

அதே உரிமை பெரும்பான்மையினருக்கு அளிக்கப்படவில்லை.   சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது.   70 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் ஏற்றுக் கொள்ளப் பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை இப்போது சீர்திருத்த வேண்டும்.   சட்டப்படி ரு.100 திருடினாலும் ரூ. 100 கோடிகள் கொள்ளை அடித்தாலும் ஒரே தண்டனை அளிக்கப் படுகிறது.   இந்த நீதியற்ற சட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் உண்டாகி இருக்கிறது.

அதே போல அனைவருக்கும் கல்வி என்பது கல்வி உரிமைச் சட்டம் ஆகும்.   ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் அது செயல்படுத்தப்படாமல் உள்ளது.   நாட்டில் பலர் இன்னும் பள்ளிக்கு செல்லவே இல்லை.   அந்த சட்டத்தை வலுவாக்கி அனைவருக்கும் கல்வி கற்பிக்க வழி செய்ய வேண்டும் “  என தனது உரையில் கூறினார்.