பாட்னா

பாட்னாவில் வெள்ளம் குறித்துச் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததற்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மாநில அரசைத் தாக்கி உள்ளார்.

கடந்த சில நாட்களாக பீகார் மாநிலத்தில்  பெய்து வரும் கன மழையால் கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இந்த வெள்ளத்தால் சுமார் 42 பேர் மரணம் அடைந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.   பீகாரின் தலைநகர் பாட்னா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.   பாட்னாவில் சென்ற மாதம் 27 முதல் 30 அம் தேதி வரை 342.5 மிமீ மழை பெய்துள்ளது.  மாநிலம் முழுவதுமான சராசரியான 255 மிமீ வரை இது அதிகமாகும்.

பீகாரை ஆளும் நிதீஷ் குமார் அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரிவர எடுக்காததால் கடும் சேதம் உண்டானதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   பீகார் மாநிலத்தை ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தற்போது பாஜக கூட்டணியில்  உள்ளது.   இரு கட்சிகளுக்கும் இடையில் தற்போது பனிப்போர் நிலவி வருகிறது.  இந்நிலையில் மத்திய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்டார்.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பீகார் மாநிலம் பகுசராய் மக்கள் தொகுதியின் உறுப்பினர் ஆவார்.  இதற்கு முன்பு அவர் நிதிஷ்குமார் கூட்டணி அமைச்சரவையில் பங்கு பெற்றிருந்தார்.    பாட்னாவின் பல பகுதிகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் மக்கள் கடும் துயர் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம், “வெள்ளம் குறித்துப் பாதுகாப்பு எச்சரிக்கையை அளித்த மாநில அரசு தங்கள் அரசைப் பாதுகாக்கவில்லை.   மக்களை பத்திரமாக இருக்குமாறு தெரிவித்த அரசு அவர்களை யார் பத்திரமாகப்  பார்த்துக் கொள்வார்கள் என்பதை  கவனிக்கவில்லை.  சரியான  முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை நிதிஷ் குமார் அரசு எடுத்திருந்தால் மக்களுக்கு இவ்வளவு துயரம் ஏற்பட்டு இருக்காது.

இந்த துயரத்துக்கு பாட்னாவில் வசிக்கும் மக்கள் காரணமில்லை.   நாங்களே காரணம்.  எங்களது கூட்டணி மீது குறிப்பாக பாஜக மீது மக்கள் பெரும் நம்பிக்கையை வைத்திருந்தனர்.   ஆனால் ஆளும் கட்சியின் சரியான நடவடிக்கை இல்லாததால் நாங்கள் தோற்று விட்டோம்.  அதற்காக நான் மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில் மத்திய பாஜக அமைச்சரின் இந்த பேச்சு பீகார் மாநிலத்தில் கடும்  பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.