டில்லி

டில்லியில் உள்ள குதுப்மினாரில் அகழாய்வு நடத்தப் போவது இல்லை என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.

வாரணாசியில் உள்ள ஞான வாபியில் கள ஆய்வு நடந்தது .அங்கு கோவில் இருந்ததற்கான பல சான்றுகள் கிடைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.  இதைத் தொடர்ந்து மேலும் பல இடங்களில் அகழாய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.   இதில் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால், டில்லியில் உள்ள குதுப்மினார் ஆகியவை அடங்கும்.

டில்லியில் உள்ள புராதன நினைவுச் சின்னங்களில்  குதுப்மினார் கோபுரமும் ஒன்றாகும். குதுப்மினாரை குத்புதின் -அய்பக் காட்டவில்லை எனவும் இந்து மன்னரான விக்கிரமாதித்தியா என்பவரே கட்டினார் என்னும் ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி தரம் விர் ஷர்மாவின் கூற்றுச் சர்ச்சைக்கு வித்திட்டது.

இதைக் கண்டறிய குதுப்மினார் வளாகத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல் பரவியதால் சலசலப்பு ஏற்பட்டது.  மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி குதுப்மினார் வளாகத்தில் அகழ்வாராய்ச்சி ஏதும் நடத்தப்போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.