டில்லி

மாநிலங்கள் 15-18 வயதானோருக்குத் தடுப்பூசிகள் செலுத்துவதைத் துரிதப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசின் திரிபான ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது.   இதன் தாக்கம் இந்தியாவிலும் காணப்படுவதால் கொரோனா தாக்கத்தின் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளது.  அதன்படி இந்தியாவில் இது வரை 165 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.  மூன்றாம் அலை கொரோனா பரவலில் சிறார்கள் அதிகம் பாதிப்பு அடைய வாய்ப்புள்ளது.

இதனால் மத்திய அரசு 15-18 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளித்துள்ளது.   இன்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா 15-18 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணியைத் துரிதப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.