புதுடெல்லி: வணிகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கான காலங்கடந்த செலுத்து தொகைகளை அக்டோபர் 15ம் தேதிக்குள் செலுத்தி கணக்கை முடிக்குமாறு பொதுத்துறை நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது மத்திய அரசு.

மத்திய அரசு நிறுவனங்களின் தலைவர்களுடன், மூலதன செலவின திட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதிப்பாய்வு கூட்டம் நடத்தினார்.

அந்தக் கூட்டத்தில், சேவை வழங்குநர்கள், வணிகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் ரசீதுகள் மற்றும் கட்டணம் செலுத்துதலை கண்டறியும் வகையில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், ஒரு போர்டலை அக்டோபர் 15ம் தேதி உருவாக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், வணிகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் முரண்பாடுகள் தோன்றி, அதன்மூலம் பணம் செலுத்தல் நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பான காலஅளவு குறித்த விபரங்களும் கேட்கப்பட்டுள்ளன.

இதுதவிர, அடுத்த 4 காலாண்டுகளுக்கான, பொதுத்துறை நிறுவனங்களின் செலவினத் திட்டங்கள் குறித்த விபரங்களும் கேட்கப்பட்டுள்ளன என்று தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.