
சென்னை: மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு மின்சார சட்டத் திருத்தத்தை கைவிடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாநில அரசால் எடுக்கப்பட்டு வருகிறது என்றுள்ளார் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; மத்திய அரசு ‘வரைவு மின்சார சட்டத் திருத்தம் – 2020’ குறித்த அறிவிப்பை வெளியிட்டு, அனைத்து மாநிலங்களிடமும் அதுதொடர்பான கருத்துகளைக் கேட்டுள்ளது. அதில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஷரத்துகளை நீக்கும்படி, மத்திய அரசை வலியுறுத்த உள்ளோம்.
ஏற்கனவே, மின்சார வாரியத்தை தனியார்மயமாக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையை கைவிடுமாறு, பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடந்த 2014ம் ஆண்டு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது. தற்போது, புதிய திருத்தமாக, மின் வினியோகத்தை, தனியார் துணை வினியோக உரிமம் பெறுபவர் வாயிலாக மேற்கொள்ளுதல் போன்ற ஷரத்துகளையும் உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட அனைத்து வரைவு திருத்தங்களும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானவை என்பதால், வரைவு மின்சார சட்ட திருத்தத்தை மத்திய அரசு கைவிடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும், தமிழக முதல்வரால் எடுக்கப்பட்டு வருகின்றன.
வரைவு மின்சார சட்டத் திருத்தமானது நடைமுறையில் அமலுக்கு வராதபடி, அனைத்து நடவடிக்கைகளும் மாநில அரசால் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel