சென்னை

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அனைத்து மதுக்கடைகளையும் மூடி சீல் மற்றும் வெல்டிங் வைக்க டாஸ்மாக் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா கட்டுப்படுத்தலுக்காக நாடெங்கும் மூன்றாம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.  தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க உத்தரவிட்டது.   அதன்படி சென்னை உள்ளிட்ட சில பகுதிகள் தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

மதுக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.   ஆதார் அவசியம் எனவும் வயது வாரியாக குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மது விற்பனை நடக்கும் என அரசு பல கட்டுப்பாடுகள் விதித்தது.  ஆயினும் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறி சமுக இடைவெளியைப் பின்பற்றாமல் மதுக்கடைகளில் குவிந்தனர்,

இதையொட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது.  இதை விசாரித்த நீதிமன்றம் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகளை ஊரடங்கு முடியும் வரை திறக்கக் கூடாது எனவும் ஆன்லைன் விற்பனை மட்டுமே செய்யலாம் எனவும் தீர்ப்பு அளித்தது.

டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள உத்தரவில் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் அடுத்த உத்தரவு வரும் வரையில் உடனடியாக மூடி சீல் இட வேண்டும் எனவும் திருட்டுக்களை தவிர்க்கக் கதவுகளைச் சரியாகப் பூட்டுவதுடன் வெல்டிங் வைத்து அடைக்க வேண்டும் எனவும் உத்தரவு இடப்பட்டுள்ளது.