டில்லி

ந்தியாவில் 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.   இதனால் நாட்டில் ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவமனைப் படுகைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.  நாடெங்கும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.  அதன் பிறகு சிறிது சிறிதாகப் பாதிப்பு எண்ணிக்கை குறையும் நேரத்தில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதையொட்டி இந்த மாநிலங்களில் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் 8 மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுதி உள்ளார்.  அவை அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், கேரளா, அசாம், மேகாலயா, திரிபுரா, ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகியவை ஆகும்.   இந்த மாநிலங்களில் 10% க்கும் அதிகமான மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

அந்த கடிதத்தில் ராஜேஷ் பூஷன், “நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகின்றது.  ஆயினும் வாரா வாரம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பை கண்காணிக்க வேண்டும்.   எந்த மாவட்டத்தில் அதிக பாதிப்பு உள்ளது என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.   இதன் மூலம் பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் கவனிக்க முடியும்.

உதாரணமாக அருணாசலப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது.  இந்த மாவட்டங்களில் வாராந்திர பாதிப்பு விகிதம் கடந்த ஜூன் 29 முதல் ஜூலை 4 வரையிலான வாரத்தில் 16.2% அதிகரித்துள்ளது.   கடந்த 4 வாரங்களாகவே இந்த மாநிலத்தில் பாதிப்பு 12% அளவில் உயர்ந்து வருகிறது.

இதே வாரத்தில் அசாம் மாநிலத்தில் 33 மாவட்டங்களில் 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.  எனவே இந்த 8 மாநிலங்களிலும் சோதனை எண்ணிக்கையை அதிகரித்து நோயாளிகளைக் கண்டறிந்து உடனடியாக தனிமைப் படுத்த வேண்டும்.  தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்க வேண்டும்.  தடுப்பூசி பணிகளையும் அதிகரிக்க வேண்டும்.

மொத்தத்தில் இந்தியாவில் 60% மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 10% மேல் உயர்ந்துள்ளது. இவற்றில் வடகிழக்கு பகுதியில் பாதிப்பு அதிகமாக உள்ளது..  இம்மாவட்டங்களில் 5 அடுக்கு கொரோனா நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.   அங்கு சோதனை, கண்டறிதல், தனிமைப்படுத்தல், சிகிச்சை மற்றும் தடுப்பூசி பணிகள் அதிகரிக்க வேண்டும். ” என வலியுறுத்தி உள்ளார்.