டில்லி

கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் நாட்டில் பாதுகாப்பு டிசம்பர் வரை அவசியம் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

கொரோனா இரண்டாம் அலையில் இந்தியா கடுமையாகப் பாதிப்பு அடைந்தது.  அதைத் தொடர்ந்து அரசு எடுத்த நடவடிக்கைகளால் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது.   கடந்த சில நாட்களாகக் கேரளா மாநிலத்தைத் தவிர பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.   இதையொட்டி பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,465 அதிகரித்து மொத்தம் 3,39,14,465 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 276 அதிகரித்து மொத்தம் 4,50,160 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 24,55 பேர் குணமாகி  இதுவரை 3,32,17,637 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,33,591 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மத்திய அரசின் சுகாதார இணைச் செயலர் லாவ் அகர்வால், “இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.   இது வரவேற்கத்தக்கதாகும்.   ஆனால் வரும் மாதங்களில் பல பண்டிகை தினங்கள் வர உள்ளன.  குறிப்பாக தற்போது நவராத்திரி தொடங்கி உள்ளது.  மேலும் வர உள்ள மாதங்களில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறும் தினங்களாகும்.

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் சுமார் 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.  எனவே மீண்டும் பாதிப்பு அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே வரும் பண்டிகை தினங்கள் மற்றும் திருமண பருவங்களை முன்னிட்டு மக்கள்  தங்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கைவிடக்கூடாது.  மக்கள் டிசம்பர் மாதம் வரை பாதுகாப்புடன் இருப்பது அவசியமாகும்.” என வலியுறுத்தி உள்ளார்.