டில்லி
ஊரடங்கு விதிகள் சரிவரப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்டறிய மத்திய அரசு தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு ஆய்வுக் குழுவை அனுப்புகிறது.
கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடெங்கும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கை அறிவித்தது. ஆயினும் கொரோனா பரவுதல் நிற்காததால் ஊரடங்கை மே மாதம் 3 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அப்படி இருந்தும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக மகாராஷ்டிராவில் தானே, குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மற்றும் சூரத், தமிழகத்தில் சென்னை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தப் பகுதிகளில் ஊரடங்கு விதிகளைச் சரியாக பின்பற்றாமையே எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஊரடங்கு விதிகள் சரிவரப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாவட்டங்களுக்கு மத்திய அரசு ஆய்வுக் குழுக்களை அனுப்பி இருந்தது. அப்போது மேற்கு வங்க மம்தா பானர்ஜியின் அரசு தங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என குழுவினர் புகார் தெரிவித்தனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கு அளித்த விளக்கத்தில் மத்திய அரசு அறிவித்த சில நாட்கள் முன்பே ஆய்வுக் குழுவினர் வந்து விட்டதாகவும் அதிக அளவில் பாதிப்புள்ள குஜராத் போன்ற மாநிலங்களுக்கு எவ்வித ஆய்வுக் குழுவும் அனுப்பவில்லை எனவும், இதனால் தங்கள் அரசு குழுவுக்கு ஒத்துழைப்பு தர இயலவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
மத்திய அரசு தற்போது ஐந்து மத்திய அமைச்சரவை அதிகாரிகள் கொண்ட ஆய்வுக் குழுவைக் குஜராத், தெலுங்கானா, மற்றும் தமிழகத்துக்கு அனுப்புகிறது. இந்த குழுவினர் ஊரடங்கு விதி மீறல்கள், அத்தியாவசிய பொருட்கள் விநியோகம், சமூக இடைவெளி, நிவாரண முகாம்களில் காணப்படும் சுகாதார கட்டுப்பாடுகள் ஆகியவற்றை ஆராய்ந்து ஆலோசனைகள் வழங்க உள்ளன.