புதுடெல்லி: அடுத்த 2 ஆண்டுகளுக்குள், புதிதாக 55 லட்சம் பேரை, முறையான பணியாளர்களாக்கி, அவர்களை இபிஎஃப் கணக்கு வரைமுறைக்குள் கொண்டுவர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

தொழிலாளர் துறை விழாவில் பேசிய அத்துறையின் செயலாளர் அபூர்வ சந்திரா பேசியதாவது, “அடுத்த 2 ஆண்டுகளில், 55 லட்சத்திற்கும் அதிகமான புதிய ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதிக்குள் கொண்டுவரப்படுவர். ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்புகளான 24% ஐ அரசாங்கம் இபிஎஃப் மானியமாக வழங்கவுள்ளது. இது கொரோனாவுக்கு பிந்தைய வேலைவாய்ப்பை அதிகரிக்கும் முயற்சியாகும்.

சாதகமான வேலைச் சூழலை உண்டாக்க மத்திய அரசு அக்டோபரில் ஈ.பி.எப்., மானிய திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் படி ரூ.15 ஆயிரத்துக்குள் சம்பளம் கொண்ட புதிய ஊழியர்களை பணிக்கு எடுத்தால் அவர்களுக்கான நிறுவன பங்களிப்பு மற்றும் ஊழியர் பங்களிப்பு இரண்டையும் ஒவ்வொரு மாதமும் அரசே செலுத்தும். மேலும் தொழிலாளர் அமைச்சகம் திட்ட நன்மைகள் முடிந்த பிறகும் அவர்கள் முறையான வேலையில் இருக்கிறார்களா? என்று கண்காணிக்கும்.

அவர் மேலும் கூறியதாவது, “இத்தகைய திட்டங்களின் செயல்திறன், வேலைவாய்ப்பு பெறும் நபர்கள், எதிர்காலத்தில் அவர்கள் முறையான துறையில் இருக்கிறார்களா, முறைசாரா துறைக்கு திரும்பச் செல்கிறார்களா போன்ற கேள்விகளுக்கு இந்த ஆய்வுகளின் மூலம் பதில்களைப் பெற அரசாங்கம் விரும்புகிறது. முறைசாரா துறையில் என்ன நடக்கிறது என்பது குறித்த எந்தவொரு தரவும் இல்லை. அந்த இடைவெளிகளை இந்த ஆய்வு நிரப்பும். இது எதிர்காலத்தில் கொள்கைகளை உருவாக்க உதவும்” என்றார்.