புதுடெல்லி: ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கப்படுவது குறித்து தாங்கள் எதுவும் தலையிட முடியாது என்று மத்திய அரசு கைவிரித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தமக்கான தலைநகரங்களை அமைத்துக்கொள்வது மாநிலங்களின் உரிமை எனவும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கப்பட்டது.
ஆந்திராவில், அமராவதியை சட்டசபை தலைநகராகவும், விசாகப்பட்டணத்தை நிர்வாகத் தலைநகராகவும், கர்ணூலை நீதிமன்ற தலைநகராகவும் உருவாக்குவதற்கு ஜெகன்மோகன் அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.
இதனை எதிர்த்தும், ஆந்திராவில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் குறித்தும் தெலுங்குதேச கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய், “தலைநகரங்கள் அமைப்பது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்.
சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்சினையும் மாநில அரசின் விவகாரம். மாநில அரசின் சார்பில் கோரப்பட்டால் மத்திய அரசு உதவி செய்யும். எனவே, 3 தலைநகரங்கள் விஷயத்தில் மத்திய அரசு தலையிடாது” என்றார்.