கொல்கத்தா

கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரசா அறக்கட்டளை வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கவில்லை என அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அன்னை தெரசா தனது வாழ்நாள் முழுவதும் தொழுநோயாளிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் சமூக சேவை செய்தவர். இவர் கடந்த 1950ல் தனது சமூக பணிகளுக்காக மிஷனரிஸ் ஆப் சாரிட்டி என்ற அறக்கட்டளையை மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கினார். இப்போதும் இந்த அறக்கட்டளை ஏராளமானவர்களுக்குச் சேவை செய்து வருகிறது.

கடந்த 25ம் தேதி, கிறிஸ்துமஸ் தினத்தன்று அன்னை தெரசா அறக்கட்டளையின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் மத்திய அரசு முடக்கியிருப்பதாக அதிர்ச்சித் தகவலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டார்.  மேலும் அவர் மனிதாபிமான நடவடிக்கைகளில் சமரசம் செய்வதை ஏற்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் அன்னை தெரசா அறக்கட்டளை நிர்வாகம் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கவில்லை எனவும் அறக்கட்டளையில் அந்நிய பணப் பரிவர்த்தனைக்கான சான்றிதழ் புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த பிரச்சனை சரியாகும் வரை வங்கி கணக்கை நிறுத்திவைக்குமாறு தாங்கள் தான் கேட்டுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.  மேலும் அமைப்பு தொடர்ந்து செயல்பட எந்த தடையும் மத்திய அரசு விதிக்கவில்லை என்றும்  கூறியுள்ளது.