டில்லி

கொல்கத்தாவில் நேற்று சிபிஐ அதிகாரிகளை விசாரணை செய்ய விடாமல் தடுத்த மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் குறித்த விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது.

சாரதா சீட்டு ஊழல் குறித்து விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் குழு நேற்று மேற்கு வங்க காவல்துறை ஆணையர் ராஜிவ்குமார் இல்லத்தில் விசாரணைக்கு சென்றது.   அப்போது  அவர்கள் மேற்கு வங்க காவல்துறையினரால்  அங்கு கைது செய்யப்பட்டு காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது.  இதனால் சிபிஐ அதிகாரிகள் விசாரணை தடைபட்டது.

சிபிஐ அமைப்பை எதிர்த்து  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.   சிபிஐ மூலம் பாஜக அரசு தங்களை மிரட்டி வருவதாக அவர் குற்றம் சாட்டி வருகிறார்.   இதை ஒட்டி அவசர மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.   நாளை அந்த மனு மீது உச்சநீதிமன்ற விசாரணை தொடங்குகிறது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மேற்கு வங்க முதல்வர் கேஷன்நாத் திரிபாதியிடம் பேசி உள்ளார்.  அப்போது அவர், “மத்திய விசாரணை அதிகாரிகளை கைது செய்தது,  காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றது, விசாரணையை தடுத்தது ஆகியவற்றை மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.   அந்த அதிகாரிகள் குறித்த விவரங்களை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தவை என்ன என்பதையும் அதன் பின்னணி உள்ளிட்ட அனைத்தும் உடனடியாக சேகரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்த வந்த அதிகாரிகளை தடுக்க காரணம் என்ன என்பதையும் உடனடியாக மேற்கு வங்க அரசு மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” என கூறி உள்ளார்.

ஆளுநர் கேஷன்நாத் திரிபாதி தாம் ஏற்கனவே இது குறித்து மாநில தலைமை செயலர் மற்றும் காவல்துறை இயக்குனருக்கு விளக்கம் கோரி சம்மன் அனுப்பி உள்ளதாகவும்  உடனடி நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் பதில் அளித்துள்ள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகம் இதை கூர்ந்து கவனித்து வருவதாக மூத்த அமைச்சரவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.