டில்லி

மலாக்கத்துறை மற்றும் சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு புதிய சட்டம் இயற்றி உள்ளது.

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புக்கள் தனித்தன்மை வாய்ந்தவை எனக் கூறப்பட்ட போதிலும் அவை மாநில அரசின் உத்தரவுப்படியே நடப்பதாகப் பலரும் குறை கூறி வருகின்றனர்.  மேலும் எதிர்க்கட்சிகளை மிரட்ட மத்திய அரசு இந்த அமைப்புக்களைப் பயன்படுத்துவதாகப் பல தலைவர்கள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புக்களின் இயக்குநர்களின் பதவிக்காலம் தற்போது 2 ஆண்டுகளாக உள்ளது.  மத்திய அரசு இரு அவசரச் சட்டங்களைப் பிறப்பித்துள்ளது.  அதன்படி தற்போது பதவியில் உள்ள இந்த அமைப்புக்களின் இயக்குநர்கள் தங்கள் பதவிக்காலம் முடிந்த பிறகும் மேலும் 3 ஆண்டுகள் பதவியில் நீடிக்க முடியும்.

குடியரசுத்தலைவர் இந்த சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளதால் இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.   அமலாக்கத்துறையின் தற்போதைய இயக்குநராக உள்ள எஸ் கே மிஸ்ராவின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

எஸ் கே மிஸ்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு பதவி ஏற்றுக் கொண்டார்.  அவருடைய பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு வரும் 17 ஆம் தேதி பதவிக்காலம் முடிவடைய உள்ளது.  இது குறித்த வழக்கில் மிகவும் அசாதாரணமான சூழலில் மட்டுமே பதவிக்காலம் நீட்டிக்க வேண்டும் என  உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது.