டில்லி
புத்தாண்டு பரிசாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
சென்னையில் கடந்த 2022ம் ஆண்டு மே 22ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85ல் இருந்து ரூ.102.63 ஆகக் குறைக்கப்பட்டது. இதுபோல் டில்லியில் ரூ.96.72, மும்பையில் ரூ.111.35 என குறைக்கப்பட்டது. பிறகு இன்று வரை பெட்ரோல் டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்யவில்லை.
கடந்த 2022 மே 22ம் தேதி சென்னையில் டீசல் ரூ.94.24 ஆகக் குறைக்கப்பட்டது. டெல்லியில் ரூ.89.62, கொல்கத்தாவில் ரூ.92.76 என இருந்தது. இதன்பிறகு இன்றுடன் 588வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு வட்டாரங்கள் இது குறித்து,
”மக்களுக்கு புத்தாண்டுப் பரிசாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பு அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோலிய அமைச்சகமும், நிதியமைச்சகமும் சமீபத்தில் இது குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தின. இந்த கூட்டத்தில் எவ்வளவு விலை குறைக்கலாம் என்பது குறித்த பரிந்துரையைப் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக மாதத்துக்கு இரண்டு முறை இந்த இரண்டு அமைச்சகங்களும் ஆலோசனை நடத்தி வந்துள்ளன. கடந்த 3 மாதங்களாக இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலர் முதல் 80 டாலருக்குள் உள்ளது. இதனால் விலை குறைப்பு குறித்து முடிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது,”
என்று தெரிவித்துள்ளன.