துரை

சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டால் தமிழ் கற்பிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா பள்ளிகள் என்னும் மத்திய அரசின் பள்ளிகளை துவக்க எதிர்ப்பு நிலவி வருகிறது.   அதற்கான முக்கிய காரணம் அந்த பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப் பட மாட்டாது என்னும் ஐயமே ஆகும்.   அதனால் இன்று வரை நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் துவக்கப்படவில்லை.

நாகர்கோயிலை சேர்ந்த ஜெயகுமார் தாமஸ் என்பவர் தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் துவக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.  இந்த அமர்வில்  நவோதயா பள்ளிகளில் இந்தி படித்தே ஆக வேண்டும் என கட்டாயப் படுத்தவில்லை என்பதற்கான ஆவணங்களை மத்திய அரசு அளித்துள்ளது.  மேலும், மாநில மொழிகளுக்கு முதலிடம் எனவும், நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டால் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளுமே ஆரம்ப வகுப்புகளில் இருந்து கற்பிக்கப்படும் என உறுதியும் அளித்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள நவோதயா பள்ளியின் முதல்வர் வெங்கடேசுவரன், “மாநில மொழி வழிக் கல்வி ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையில் நவோதயா பள்ளிகளில் உள்ளது.  பத்தாம் வகுப்பில் முதல் மொழியாகவும் அந்தந்த மாநில மொழிகளே உள்ளன.  பதினொன்றாம் வகுப்பில் இருந்து மாணவர்கள் விரும்பினால் கூடுதல் மொழியாக தமிழை கற்கவும் வசதி உள்ளது.” என மத்திய அரசு சார்பாக கூறினார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என அறிவித்த நீதி மன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.