டில்லி

ரே ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், பைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

சுற்றுச்சூழலைக் கடுமையாக பிளாஸ்டிக் பொருட்கள் பாதிப்பதால் அவற்றைத் தடை செய்ய வேண்டும் என பல நாட்களாக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.   நிலம், நீர் நிலைகள் ஆகியவை பிளாஸ்டிக்கால் கடுமையாக பாதிப்பு அடைகின்றன.  பிளாஸ்டிக்கை உண்ணும் கால்நடைகள் பாதிப்பு அடைந்து நீர்நிலைகளில் கலக்கப்படும் பிளாஸ்டிக்கினால் மீன்கள் உள்ளிட்டவையும் உயிர் இழக்கின்றன.

இதையொட்டி பல மாநில அரசுகள் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்துள்ளன.   பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக சணல் அல்லது துணிப்பைகள் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.  ஆயினும் காய்கறி வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் பிளாஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.   இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது மத்திய அரசு ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் தடை விதித்துள்ளது.  இவற்றை நாடெங்கும் பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  பிளாஸ்டிக்கினால் உண்டாகும் பாதிப்பைத் தவிர்க்கவே இந்த உத்தரவு இடப்பட்டுள்ளதாகவும் வரும் ஜூலை மாதம் முதல் இது அமலுக்கு வருவதாகவும் தெரியப்படுத்தி உள்ளது.