டில்லி
மத்திய அரசு அனைத்து வகையான வெங்காயங்களின் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது.
நாட்டில் அதிக அளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்படும் மாநிலங்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்டவை ஆகும். இந்த மாநிலங்களில் அண்மைக் காலமாக இடைவிடாமல் பெய்த மழையால் வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சந்தைகளில் வெங்காயத்தின் வரத்து குறைந்தது.
இந்தியாவின் பெருநகரங்களான டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வெங்காயத்தின் மொத்த விலையும் சில்லறை விலையும் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.
ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய வெங்காய சந்தையான மகாராஷ்டிர மாநிலம் லசல்கோன் சந்தையில், கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை 45 ரூபாயாக இருந்தது. மேலும் அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் வெங்காயத்தைப் பதுக்கி, அவற்றைக் கூடுதல் விலைக்கு விற்கும் நடவடிக்கைகளை, மொத்த வியாபாரிகளும், ‘ஆன்லைன்’ வர்த்தகர்களும் துவக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் நாடு முழுவதும் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து வகையான வெங்காயங்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.