புதுடெல்லி: 53 வகை மருந்துகளை மொத்த உற்பத்தி செய்வதற்கு, ரூ.6940 கோடி அளவிற்கு உற்பத்தி தொடர்பான சலுகையை அறிவித்துள்ளது மத்திய அரசு.
மருந்துகள் தயாரிப்பதற்கு தேவையான கச்சாப் பொருட்களுக்கு சீனாவை நம்பியிருப்பதை குறைக்கும் நோக்கத்துடன் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதன்மூலம், நாட்டிலுள்ள 136 மருந்து உற்பத்தி யூனிட்டுகள் பயன்பெறும் என்றும், ரூ.46400 கோடி மதிப்பிலான கூடுதல் உற்பத்தி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அடுத்த 8 ஆண்டுகளுக்கு இதன்மூலம் கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதும் கூடுதல் தகவல்.
குறிப்பிட்ட மருந்துகளை, 2019-20ம் ஆண்டு தொடங்கி, அடுத்த 6 ஆண்டுகளுக்கு கூடுதலாக உற்பத்தி செய்யும் தகுதியான நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு, ஊக்கத்தொகை சலுகை அளிக்கப்படும்.
கிட்டத்தட்ட பாதியளவு மொத்த மருந்துகள், நொதிக்க வைக்கும் முறையிலேயே தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பென்சிலின்-ஜி கேஎஸ்எம் மருந்தும் சலுகைக்கு உட்படும் மருந்துகளில் ஒன்றாகும்.
தகுதிவாய்ந்த மருந்துகளில் ஒன்றுக்காக, ஒரு உற்பத்தியாளர் மட்டு‍மே விண்ணப்பிக்க முடியும். அதாவது, 53 வகை மருந்துகளில், ஒரு தயாரிப்பாளர், ஏதேனும் ஒரு மருந்திற்கான சலுகையை மட்டுமே பெற முடியும். அதேசமயம், ஒரு குறிப்பிட்ட மருந்து தொடர்பாக எந்த விண்ணப்பமும் பெறப்படவில்லை என்றால், ஒரு விண்ணப்பதாரர், போட்டியில்லாத அந்த மருந்துக்கான சலுகையையும் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.