பூரண குணம் என்ற தீர்வு கிடைக்காமல் மரணத்தை மருந்துகளால் மட்டுமே தள்ளிப் போட்டுக் கொண்டு வரும் பரிதாபத்துக்குரியவர்கள் எய்ட்ஸ் நோயாளிகள்.
நோயின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பல கட்டங்களில் வைத்து இவர்களுக்கு மருத்துவ உலகம் சிகிச்சை அளித்து வருகிறது. இவர்களுக்கு வேண்டிய பிரத்யேகமான மருந்துகளை தவறாமல் கொடுப்பதில் உலகம் முழுவதும் அரசுகள் தனி கவனம் கொண்டுள்ளன.
இந்தியாவிலும் அப்படித்தான் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் இருந்தன. ஆனால் அண்மைக்காலமாக எச்ஐவி நோயாளிகள் தங்களுக்கான மருந்து கிடைக்காமல் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர்.
இவர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் மருந்து கிடைக்க செய்ய வேண்டிய மத்திய எய்ட்ஸ் கண்ட்ரோல் அமைப்பு (NACO), எச்ஐவி நோய்களுக்கான மருந்து விநியோகத்தை அடியோடு நிறுத்தி விட்டுள்ளது. தேவைகளுக்கு ஏற்ப மாநில எய்ட்ஸ் கன்ட்ரோல் அமைப்புகளே உள்ளூர் சந்தைகளில் மருந்துகளை வாங்கி விநியோகம் செய்யுமாறு கூறிவிட்டுள்ளது.
மத்திய அரசுதான் இப்படி நோயாளிகளை கைகழுவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது என்றால், மாநில அரசாவது அக்கறையுடன் செயல்படுகிறதா இல்லை என்றால் அதுவும் இல்லை என்கின்றனர் நோயாளிகள்.
எல்லா நோய்களுக்கும் தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கி ஆறுமாதத்திற்கு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டியது தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் கடமை. ஆனால் எயிட்ஸ் நோயாளிகளின் விஷயத்தில் இந்த கடமையை அந்த அமைப்பு செய்யத் தவறி வருகிறது. இன்னொரு பக்கம், மருந்துகளின் தட்டுப்பாடு காரணமாக எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பெரும் பிரச்சனை மருந்துகளை மாற்றி மாற்றி மருத்துவர்கள் பரிந்துரைப்பது.
இப்படி மருந்து மாத்திரைகளை மாற்றி சாப்பிடும் போது ஒவ்வொரு தடவையும் கிட்னி பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர் எய்ட்ஸ் நோயாளிகள்.
மரணத்தோடு போராடி வரும் இவர்கள், இப்போது மத்திய மாநில அரசுகளுக்கு அக்கறையின்மைக்கு எதிராகவும் போராட வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கிற பரிதாபத்தை என்னவென்று விவரிப்பது.
– பி.எல்.வெங்கட்