சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடக அரசு கோரிக்கையை மத்திய அரசு ஏற்கக்கூடாது என டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு நீதி கிடைப்பதை கர்நாடக அரசு அடுத்தடுத்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அந்த வரிசையில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவையும் அமைக்கக் கூடாது என்று கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது.
கர்நாடக அரசின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்காக வினாடிக்கு 6000 கனஅடி வீதம் 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 3 நாட்களாகி யும் அதை செயல்படுத்தாமல் கர்நாடக அரசு தாமதம் செய்து கொண்டிருக்கிறது.
அடுத்தக்கட்டமாக தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படவிருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரான இந்த செயல்களுக்கு மத்திய அரசையும் துணை சேர்த்துக்கொள்ள கர்நாடக அரசு திட்டமிட்டிருக்கிறது.
அதற்காக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியை தில்லியில் நேற்று சந்தித்து பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்றும், அதற்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டுமென்றும் கோரியிருக்கிறார். அதுமட்டுமின்றி, காவிரி மேலாண்மை வாரியம் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் உமாபாரதியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா,”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகமும் கேட்கவில்லை; கர்நாடகமும் கேட்கவில்லை. உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிட்டுள்ளது.
இது தேவையற்றது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அல்லது கூடுதல் தலைமை வழக்கறிஞர் மூலம் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய நீர்வள அமைச்சர் உமாபாரதியிடம் வலியுறுத்தியுள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.
சித்தராமைய்யாவின் இந்த செயல் மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் குறுக்கிடும் செயல் என்பது மட்டுமின்றி, தமிழகத்திற்கு எதிரான அதன் மோசடிக்கு மத்திய அரசையும் கூட்டணி சேர்க்கும் செயலாகும். இதை அனுமதிக்கக்கூடாது.
அதுமட்டுமின்றி, சித்தராமையா கூறியுள்ள தகவல்கள் பொய்யானவை ஆகும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகமோ, கர்நாடகமோ கோரவில்லை என்று சித்தராமைய்யா கூறியிருப்பது உண்மைக்கு மாறானதாகும்.
உண்மையில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.
அந்த வழக்கின் அடிப்படையில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு மூன்றரை ஆண்டுகளாகியும் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு இன்னும் அமைக்கவில்லை. மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.
அந்த வழக்கின் அடிப்படையில் தான் காவிரி மேற்பார்வைக் குழுவை உச்சநீதிமன்றமே அமைத்தது. ஒருவேளை தமிழகம் கோரிக்கை விடுக்காவிட்டாலும் கூட, காவிரி பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை வாரியம் தான் ஒரே நிரந்தரத் தீர்வு என்பதால் அதை உடனடியாக அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆணையிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உண்டு.
ஆனால், இதையெல்லாம் உணராமலும், தெரிந்த உண்மைகளையெல்லாம் மறைத்து விட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிராக கர்நாடக முதல்வர் சித்தராமையா விடுக்கும் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கக் கூடாது.
1991-ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக காவிரி நதிநீர் ஆணையத்தை அமைக்க 1997-ஆம் ஆம் ஆண்டில் மத்திய அரசு முடிவு செய்தது.
ஆனால், அதற்கு கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்ததாலும், மத்தியிலும், மாநிலத்திலும் ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடந்ததாலும் ஆணையம் அமைக்கப்படவில்லை.
அதன்பின் 1998-ஆம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சி அமைந்த பிறகும் கர்நாடக கட்சிகளின் அரசியல் அழுத்தங்களுக்கு பணிந்து அதிகாரமற்ற அமைப்பாக காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது.
அதேபோன்று இப்போதும் குழப்பங்களை உருவாக்க கர்நாடக முதல்- அமைச்சர் சித்தராமையாவும், அம்மாநில அரசியல் தலைவர்களும் முயலுகின்றனர். அச்சதி முயற்சிகள் வெற்றி பெற மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தடுக்க கர்நாடக அரசு இவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ளும் போது, தமிழகத்தில் காவிரி பிரச்சனை என்ற ஒன்றே இல்லை என்பது போல தமிழக ஆட்சியாளர்கள் நடந்து கொள்வதும், அலட்சியம் காட்டுவதும் தான் நமது சாபக்கேடு.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது தமிழகத்திற்கு கிடைத்த அரியவாய்ப்ப்பு. இதை நழுவவிடக் கூடாது. காவிரி ஆணையத்தை போல மேலாண்மை வாரியத்தையும் அதிகாரமற்ற அமைப்பாக உருவாக்கிவிடக் கூடாது.
மாறாக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், இமாலய பிரதேசம், தில்லி, சண்டிகர் ஆகிய மாநிலங்களுக்கு நீரும், மின்சாரமும் அளிப்பதற்காக பக்ரா நங்கல், பியாஸ் ஆகிய அணைகளை நிர்வகிப்பதற்காக அமைக்கப்பட்ட பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று அனைத்து அதிகாரங்களும் கொண்ட அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
இதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தமிழகம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.