சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்துள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு வழங்கும் ரூ. 48 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு, தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் (Tamil Nadu Coastal Zone Management Authority) அனுமதி அளித்துள்ளது. அதன்படி, மொத்தம் 466 கி.மீ நீளத்திற்கு குழாய் அமைக்கப்பட உள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இறக்குமதி செலவு குறைப்பு மற்றும் சமையல் எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க, வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு (Liquefied petroleum gas) வழங்கும் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உள்பட 9 மண்டலங்களுக்கு குழாய் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வீடுகளுக்கு குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை டோரண்ட் கேஸ் நிறுவனம் (Torrent Gas) செயல்படுத்த உள்ளது. சென்னையில் நீலாங்கரை, அடையாறு, திருவான்மியூர், சேப்பாக்கம், ராயபுரம், பாரிமுனை, தண்டயார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், 466 கி.மீ. நீளத்திற்கு குழாய் அமைக்கப்படும் நிலையில் 260 கி.மீ. ஆணைய பகுதிகளில் வருகிறது. ரூ.48 கோடி மதிப்பிலான குழாய் எரிவாயு திட்டத்தை டோரண்ட் கேஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது..