சென்னை:
காவிரி நீர் தொடர்பான வழக்கில் ஏற்கனவே உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்திய மத்திய அரசு, உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி நதிநீர் பங்கீட்டிற்கான வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மே 3ம் தேதி முடிவடையும் நிலையில், மேலும் 2 வார கால அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.
இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் ஜெயக்குமார்: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மேலும் அவகாசம் கேட்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் உள்ளது என்றும் மத்திய அரசு மேலும் 2 வாரம் கேட்பதை ஏற்க முடியாது என்றும் அவகாசம் கேட்பதற்கு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கும் என்றார்.
மத்திய அரசின் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் மீண்டும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: கர்நாடக தேர்தலுக்காக வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிப்போடுகிறது. தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிதலைவர் – திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்: காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் துரோகம் தொடர்கிறது; மாநில அரசு என்ன செய்யப்போகிறது? காவிரி வாரியத்தை மத்திய அரசு அமைக்கப்போவதில்லை என்பதற்கு சான்றே புதிய மனுதாக்கல் என்று கூறி உள்ளார்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்: தமிழகத்திற்கு காவிரி நீர் இல்லை என மத்திய அரசு மறைமுகமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்: தமிழகத்தின் உரிமையை மறுக்கும் வகையில் மத்திய அரசு செயல்படு கிறது. காவிரி நீரை தமிழகத்துக்கு தர விருப்பம் இல்லாமல்தான் மத்திய அரசு அவகாசம் கேட்கிறது. கர்நாடகாவில் தேர்தல் முடிந்தாலும் காவிரி வாரியத்தை மத்திய அரசு அமைக்காது.
பாஜ நிர்வாகி சி.பி. ராதாகிருஷ்ணன்: இருமாநில விவசாயிகளுக்கும் உகந்த வகையில் காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வை ஏற்படுத்தவே அவகாசம் என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு: மத்திய அரசின் காலம் தாழ்த்தும் செயலுக்கு விவசாயிகள் அமைப்பு தலைவர் அய்யாகண்ணு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காலம் தாழ்ந்து வழங்கப்படும் தீர்ப்பு மறுக்கப்படும் தீர்ப்பு என்றும், தமிழகத்தில் ஓட்டு கிடைக்காது என்பதால் மத்திய அரசு பழிவாங்குகிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். மேலும் திருச்சி கல்லணையில் டெல்டா விவசாயிகள் முன்னெடுக்கும் போராட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.