சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக மீண்டும் விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதற்கான விளக்கம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்தாண்டு நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு அனுப்பினார். நீட் விலக்கு மசோதா குறித்து கடந்த ஆண்டே மத்திய சுகாதார அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்த நிலையில் தமிழக மருத்துவத்துறையும் மத்திய அமைச்சகத்திற்கு பதில் அளித்திருந்தது.
இதுதொடர்பாக மத்தியஅரசு மற்றும் மருத்துவ கவுன்சிலின் கருத்துக்கள் மாறுபட்ட நிலையில் இருந்தது, ஆர்டிஐ குறித்து எழுப்பப்பட்ட கேள்வியில் தெரிய வந்தது.
இந்த நிலையில், ஆயுஷ் அமைச்சகத்தின் மூலம் தமிழக மருத்துவத்துறைக்கு நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய அரசு மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் எழுதி உள்ளது.
இதை உறுதி செய்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து ஓரிரு வாரங்களில் தமிழக அரசுத் தரப்பில் மீண்டும் விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று (18ந்தேதி) முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், நீட் வழக்கு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால்,. நீட் தொடர்பான வழக்கை நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருக்க விரும்பவில்லை எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அதைத்தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, சுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில்குமார், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக்கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கு விசாரணைக்கு வரும் போது தமிழ்நாடு அரசின் சார்பாக எடுத்துரைக்க வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.