புதுடெல்லி :
மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் தரவுகள், உடல்நலம் மற்றும் பணியிடப் பாதுகாப்பு குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் இருந்து வேறோர் மாநிலத்திற்கு புலம்பெயரும் போது இருமாநில அரசுகளும் என்னென்னெ நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அதில் கூறியிருக்கிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க, மாநில அளவிலான நோடல் அதிகாரியையும், மாவட்ட, ஒன்றிய மற்றும் பஞ்சாயத்து அளவிலான நோடல் அதிகாரிகளையும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நியமிக்கவேண்டும். இரு மாநில நோடல் அதிகாரிகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும்.
இருமாநில அரசுகளும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து பரிசோதனை மேற்கொள்வது அவசியம், அதே நேரத்தில் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்த எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கக்கூடாது. சொந்த மாநிலத்தில் இருந்து வெளியில் செல்லும் முன் அவர்களுக்குத் தேவையான முக கவசங்கள், ஹாண்ட் சானிடைசர் மற்றும் சோப்பு போன்றவற்றை அந்த மாநில அரசு வழங்க வேண்டும்.
தங்கள் மாநில தொழிலாளர்கள் குறித்த அனைத்து தரவுகளையும் சேகரிப்பதுடன் அதனை புலம் பெயரும் மாநில அதிகாரிகளுக்கும் தொழிலாளர் நல அலுவலர்களுக்கும் தெரிவிக்கவேண்டும். தகுதியுடைய தொழிலாளர்களை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை இருமாநில அரசுகளும் மேற்கொள்ளவேண்டும்.
பிரதம மந்திரியின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY), ஆகிய காப்பீடு திட்டங்களுக்குச் செலுத்த வேண்டிய சந்தா தொகையை தகுதியுடைய கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாநில கட்டிட மற்றும் பிற கட்டுமான தொழிலாளர் நல வாரியம் (BOCW) செலுத்தவேண்டும். மேலும் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான முதியோர் ஓய்வூதிய திட்டமான பிரதம மந்திரியின் ஷ்ரம் யோகி மான்-தன் (PMSYM) திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்கள் குறித்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மாநில தொழிலாளர் நலத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
தொழிலாளர்களை பணியிலமர்த்தும் முதலாளிகள், விதிமுறைகளை மீறாமல் அவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்கவும், அவர்களுக்குத் தேவையான தங்கும் வசதி செய்துத்தருவதுடன் அவர்களை சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களில் இணைக்கவும் வேண்டும். மேலும் புலம்பெயர ஆகும் பயனச் செலவை அவர்களுக்கு வழங்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையே ஆன புலம்பெயர் தொழிலாளர் சட்டம், 1979 சட்டவிதிகள் படி தொழிலாளர்களுக்கு மேற்கண்ட சலுகைகள் மற்றும் வசதிகள் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை மாநில தொழிலாளர் நலத்துறை உறுதிசெய்யவேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் தங்கள் படிப்பைத் தடையின்றி தொடர தேவையான நடவடிக்கைகளை இருமாநில அரசுகளும் மேற்கொள்ளவேண்டும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் துயர் குறித்து தெரிவிக்க குறை தீர்ப்பு மையம் ஏற்படுத்தவும் கட்டணமில்லா ஹெல்ப்-லைன் எண்களை வழங்கவும், நிறுவனங்கள் – தொழிலாளர்களுக்கு தெரியும்படி அறிவிப்பு வைக்கவும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டும். மேலும், மாநில அரசுகள் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தி தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு, மாநில, யூனியன் பிரதேச, தொழிலாளர் நலத் துறை மற்றும் நிறுவனங்கள் ஆகியவை தொழிலாளர் நலனில் செய்யவேண்டியது என்ன என்பது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.