சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்து தமிழகத்திற்கு துரோகம் செய்ததை கண்டித்தும், இந்த விவகாரத்தில் தமிழக  அரசின் அலட்சியத்தையும் கண்டித்தும் வரும் 8-ந்தேதி பாமக போராட்டம் நடத்துகிறது.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால், காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என தமிழ்நாட்டு விவசாயிகள் மத்தியில் முளைத்திருந்த நம்பிக்கையை மத்திய அரசு கிள்ளி எறிந்திருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று கூறி தமிழ்நாட்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மத்திய அரசு செய்த துரோகம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வி‌ஷயத்தில் மத்திய அரசு நடந்து கொண்ட விதம் நியாயப்படுத்த முடியாதது; மன்னிக்க முடியாதது.
மேலாண்மை வாரியத்தை அமைக்காததற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணங்கள் எதுவும் உண்மையல்ல. ஆனாலும், இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசு கடுமையாக எதிர்ப்பு காட்டியதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றமும் பின்வாங்கி விட்டது.
ramdoss_pmk
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான ஆணையை நிறுத்தி வைப்பதாக நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு அறிவித்திருக்கிறது.
அநேகமாக இந்த விவகாரம் நீதிபதி சலமேஸ்வர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முடிவுக்கு விடப்படும் என்று கூறப்படுகிறது. அந்த அமர்விடம் காவிரி பிரச்சினை தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், காவிரிப் பிரச்சினைக்காக அந்த அமர்வு எப்போதாவது தான் கூடும் என்பதால் உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை.
மொத்தத்தில் மேலாண்மை வாரியம் கனவாகும் ஆபத்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வி‌ஷயத்தில் தமிழகத்திற்கு பின்னடைவு ஏற்பட்டதற்கு தமிழக அரசின் அலட்சியமும் முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.
காவிரி பிரச்சினையில் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து மீள அனைத்துக் கட்சிக் கூட்டம், அமைச்சரவைக் கூட்டம் ஆகியவற்றை நடத்தியும், கர்நாடகத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க வைத்தும் மத்திய அரசுக்கு கர்நாடகம் அழுத்தம் கொடுத்தது.
கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்த வி‌ஷயத்தில் மாநில உணர்வுடன் செயல்பட்டு பிரதமருக்கு நெருக்கடி தந்தனர்.
ஆனால், தமிழக அரசோ உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததுடன் தனது கடமை முடிந்து விட்டதாக நினைத்தது. அதனால் தான் கைகூடவிருந்த காவிரி மேலாண்மை வாரியம் நம்மிடமிருந்து கை நழுவியது.
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசு, அலட்சியமாக இருந்து தமிழக உரிமைகளை பறிகொடுத்த தமிழக அரசு ஆகியவற்றைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 8-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும்.
என் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே. மூர்த்தி மற்றும் பல்வேறு உழவர் அமைப்புகளின் நிர்வாகிகளும் பெருமளவில் கலந்து கொள்வர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு  கூறியுள்ளார்.